2025, டிசம்பர் 29-ஆம் தேதி உக்ரைனின் ட்ரோன்கள் ரஷ்ய அதிபர் புதினின் வீட்டைக் குறிவைத்துத் தாக்கின. இதில் புதினின் வீடு சேதமடைந்தாலும் அவருக்கு எந்த பாதிப்பும் நேரவில்லை. ஆனால், இது ட்ரம்பின் ஆலோசனைப்படி உக்ரைன் மேற்கொண்ட தாக்குதல் என்றொரு பேச்சு கிளம்பியது. இதனால் ரஷ்ய அதிபரைத் தீர்த்துக்கட்ட ட்ரம்ப் ஸ்கெட்ச் போட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சமீபமாக உக்ரைன் மீது தொடர்ச்சியாக பலமான தாக்குதலை மேற்கொண்டுவந்தது ரஷ்யா. உக்ரைனின் ஒடேசா, கீவ் நகர் மீது தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திவந்தது. கூடவே, "உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு அமைதிப் பேச்சுவார்த்தையில் அத்தனை ஆர்வமில்லை, அதனால்தான் ரஷ்யா முன்வைத்த சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட ஆர்வம் காட்டவில்லை' என்ற குற்றச்சாட்டையும் எழுப்பினார் புதின்.
இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குத லுக்குப் பதிலடியாக 2025, டிசம்பர் 29-ஆம் தேதி உக்ரைனினிலிருந்து நீண்ட தூரம் பறந்துசென்று இலக்கைத் தாக்கக்கூடிய 100 ட்ரோன்கள் ரஷ்யாவைத் தாக்கின. வடமாஸ்கோவின் நோவ்கோரோட் பிராந்தியத்திலுள்ள விளாடிமிர் புதினின் வீட்டை குறிவைத்து இந்த ட்ரோன்கள் தாக்கின. இதனை ரஷ்யப் படையினர் வெற்றிகரமாக இடைமறித்து முறியடித்தனர். சின்னஞ்சிறு சேதங்களைத் தவிர பெரிதாக எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், தன் வீட்டின் மீதான உக்ரைனின் தாக்குதலுக்கு தக்க பதிலடி இல்லாமல் போகாது என பொதுவாக எச்சரித்துள்ளார் ரஷ்ய அதிபர். அதேசமயம் ரஷ்ய உளவுத்துறையோ, இந்தத் தாக்குதல் அமெரிக்காவின் திட்டத்தின் பேரிலேயே நடத்தப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததுமுதலே ரஷ்ய- உக்ரைன் போரில் சமாதான முயற்சிகளை மேற்கொண்டுவரும் ட்ரம்ப், அந்தத் தாக்குதல் நடப்பதற்குமுன் புதினுடன் பேசியிருந்தார்.
ஜெலன்ஸ்கியுடன் பேசிவிட்டு சில மணி நேரத்தில் மீண்டும் பதிலளிப்பதாகவும், அதுவரை தனது இருப்பிடத்திலே இருக்குமாறு ட்ரம்ப் புதினைக் கேட்டுக்கொண்டார். ட்ரம்ப் புதினை அழைக்கும்போது அமெரிக்க புலனாய்வு, உளவு அமைப்புகள் புதினின் ரகசிய இருப்பிடத்தை கண்காணித்து கண்டறிய முயன்றதாகவும், அதன்பின்பே அந்த ட்ரோன் தாக்குதல் நடந்தது என ரஷ்ய உளவுத்துறை சந்தேகிக்கிறது.
மாறாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள், ட்ரோன் தாக்குதல் முயற்சியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அல்லது
அவரது வசிப்பிடங்கள் எதையும் நாங்கள் குறிவைக்கவில்லை என்று விளக்கமளித்து மாஸ்கோவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
ஆனால் சிறிய நாடுகளின் அதிபர்களையும், தீவிரவாத இயக்கங்களின் தலைவர்களையும் அமெரிக்க ராணுவம் இப்படி பலமுறை குறிவைத்து அழித்திருக்கிறது. இரு பெரிய வல்லரசுகளில் ஒன்று, தங்கள் அதிபர் மற்றொரு வல்லரசால் குறிவைக்கப்பட்டார் என சந்தேகப்படுவது உலக அமைதிக்கு நல்லதல்ல!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/02/putin-trump-2026-01-02-11-50-35.jpg)